பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்களை காரில் கடத்தி பணம் பறிக்க முயன்ற 13 பேர் கொண்ட கும்பல் கைது

பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்களை காரில் கடத்தி பணம் பறிக்க முயன்ற 13 பேர் கொண்ட கும்பல் கைது

Update: 2021-12-20 16:37 GMT
பல்லடம், 
பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்களை காரில் கடத்தி பணம் பறிக்க முயன்ற 13 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடத்தல் கும்பல்
பல்லடம் பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள், பனியன் நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமன்றி வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் இந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். பல்லடம் பகுதியில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்களை கடத்தி அவர்களிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதீப்குமார் மல்லி (வயது 23), புதேஷ்பனிகிராய் (26), கன்ஜன்முன்னா (27) ஆகியோர் பல்லடம் அருகே அபிராமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சின்னக்கரை பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தனர்.
பணம் கேட்டு மிரட்டல்
கடந்த 15-ந்தேதி இரவு வேலை முடிந்து இந்த தொழிலாளர்கள் தாங்கள் தங்கியுள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கரைப்புதூர் - முருகம்பாளையம் ரோட்டில் நடந்து வந்த போது ஒரு கார் அவர்கள் அருகில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மர்ம ஆசாமிகள் இவர்கள் 3 பேரையும் காரில் கடத்திச்சென்றனர். அடுத்த நாள் பிரதீப்குமார் மல்லியின் மனைவி நிர்மலாசூர்யாவை அவர்கள் தொடர்பு கொண்டு உன் கணவரை விடுவிக்க ரூ.50 ஆயிரம் வேண்டும் எனக்கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்லடம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் தலைமையில் கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தேடி வருவதை அறிந்த கடத்தல் கும்பல் அவர்கள் 3 பேரையும் கோவை பஸ் நிலைய மேம்பாலத்தில் இறக்கிவிட்டு விட்டு தப்பிச்சென்றனர்.
வாகன சோதனையில் சிக்கிய கார்
அங்கிருந்து பல்லடம் போலீஸ் நிலையம் வந்த அவர்கள், தாங்கள் கடத்தப்பட்டது குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி ஒடிசாவை சேர்ந்த சிபாசாகு(23) என்பவர் காரில் கடத்தப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் பல்லடம் அரசு மருத்துவமனை அருகே சிபாசாகு கடத்தப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார். காரில் இருந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள்தான் பிரதீப்குமார் மல்லி, புதேஷ்பனிகிராய், கன்ஜன்முன்னா ஆகியோரையும் கடத்தினர் என்பது தெரிய வந்தது. 
13 பேர் கைது
பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த சிவகங்கையை சேர்ந்த அழகுசுப்பிரமணி (37), அமர்நாத்(21), பீகாரை சேர்ந்த ராஜ்குமார் (27), கரைப்புதூரை சேர்ந்த அஜீத் (26), பல்லடத்தை சேர்ந்த விக்னேஷ், பாலகிருஷ்ணன், தர்மேந்திரா, கவிபாரதி, உகேஷ், முத்துபாண்டி, சுந்தர், நசீர்அன்சாரி மற்றும் பாப்பாமியா ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர். 
கைது செய்யப்பட்டவர்களில் விக்னேஷ் முன்னாள் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே கொலை வழக்கில் தொடர்புடையவர். கைது செய்யப்பட்ட 13 பேரும் வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 13 பேரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்