நிலக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

நிலக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-12-20 16:32 GMT
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே எத்திலோட்டில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்தனர். பி்ன்னர் அவர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதில், மாற்றுத்திறனாளிகள் பொறுப்பாளர்களான சர்வதேச தடகள வீராங்கனை நீலாவதி, ரவி, பானுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து பணி வழங்கக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. 
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவி ராஜலட்சுமி மற்றும் நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்