முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியநாச்சி அம்மன் உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை நடைபெற்றது. காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கி கணபதி ஹோம பூஜை நடைபெற்றது. 8 மணிக்கு நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆயிரம் நகர வைசியர் சமூக விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதுபோல் நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்மன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆருத்ரா தரிசன விழாக்குழுவினர் செய்திருந்தனர்.