நிர்வாணமான நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது
நிர்வாணமான நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது
தாராபுரம்,
தாராபுரம் அருகே காட்டுப்பகுதியில் நிர்வாணமான நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நிர்வாண நிலையில் பெண் பிணம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்டது பாலசுப்பிரமணி நகர். இப்பகுதியில் உள்ள வீட்டுமனை நிலத்தில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரி முத்துசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, தடவியல் நிபுணர், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பிணமாக கிடந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே பிணமாக கிடந்த பெண் குறித்து சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனைப் பார்த்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் திருப்பூரிலிருந்து தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் தாராபுரம் போலீசாரிடம் எனது மனைவி பழனி கோவிலுக்கு செல்வதாக என்னிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் சமூக வலைத்தளங்களில் வந்த புகைப்படம் எனது மனைவி போல தெரிந்ததால் தான் வந்ததாக தெரிவித்தார்.
அடையாளம் தெரிந்தது
பின்னர் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் உடலை அவரிடம் காண்பித்தனர். அப்போது அவர் கதறி அழுதபடி இது தனது மனைவி தான் என்று உறுதிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் புகார் பெற்றனர். அதில், நான் திருப்பூர் திருமுருகன் பூண்டிபகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் பிரகாஷ் (50) என்றும், பிணமாக கிடந்தது எனது மனைவி சுஜாதா (46) என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பழனி கோவிலுக்கு சென்றதாக கணவரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வந்த சுஜாதாவை யார், அவரை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர், எப்படி இந்த பகுதிக்கு அவர் வந்தார் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை செய்து வருகிறார். மேலும் கள்ளத்தொடர்பில் இந்த கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.