601 கட்டிடங்கள் பழுதடைந்ததாக கண்டுபிடிப்பு எஸ்.குச்சிப்பாளையத்தில் பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டார்

எஸ்.குச்சிப்பாளையத்தில் உள்ள பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டார். மேலும் மாவட்டத்தில் 601 பள்ளிக்கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதாக கண்டறியப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

Update: 2021-12-20 16:18 GMT

விக்கிரவாண்டி, 

திருநெல்வேலியில் ஒரு பள்ளி கட்டிடத்தின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் பயன்பாடு இல்லாமலும், உறுதித்தன்மை இழந்தும் இருக்கும் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து அதை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.


கட்டிடம் இடிக்கும் பணி

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விக்கிரவாண்டி ஒன்றியம் எஸ். குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில், உறுதித்தன்மையற்ற கட்டிடம் ஒன்றை இடித்து அகற்றும் பணி  நேற்று தொடங்கியது. 

இப்பணியை நேற்று காலை கலெக்டர் மோகன்  நேரில் ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கூடத்தில் உள்ள வகுப்பறை, கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், அதன் மேற்கூரைகள் அங்குள்ள வசதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

59 கட்டிடங்களை இடிக்க முடிவு

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை  அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 1,115-ம், நடுநிலைப் பள்ளிகள் 267, உயர்நிலைப்பள்ளிகள் 187, மேல்நிலைபள்ளிகள் 205 என்று மொத்தம் 1814 பள்ளிக்கூடங்கள் உள்ளன.

இதில் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில்,  601 பள்ளிக்கூடங்களில் பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 இதில் முதற்கட்டமாக 59 கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை ஆய்வு செய்து துரிதப்படுத்தும் வகையில் தாலுகாவுக்கு ஒரு அதிகாரி இதற்கென நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

10 நாட்களில் முடிவடையும்

விக்கிரவாண்டி ஒன்றியத்தை பொறுத்தவரை 57 பழுதடைந்த கட்டிடங்கள் இருக்கிறது. இதில் முதற்கட்டமாக பாப்பனப்பட்டு ஊராட்சியில் எஸ்.குச்சிபாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பழுதடைந்த  கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணி 10 நாட்களில் முடிவடையும். 

மாணவர்களின் பாதுகாப்பு கருதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, ஆணையிட்டுள்ளதால் துரிதமாக இப்பணிகள்  நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது திட்ட இயக்குனர் சங்கர், தாசில்தார் இளவரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன், ஒன்றிய பொறியாளர் இளையராஜா, ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா அரசி ரவிதுரை, வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, பள்ளி தலைமை ஆசிரியை தேவகி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவி துரை, ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம், ஊராட்சி செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்