இடைநீக்கம் செய்யப்பட்டவரை மீண்டும் சேர்க்கக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்கக்கோரி திண்டிவனத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-20 16:15 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் ரோஷணை காலனி மாரியம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர் விஜயராஜ். இவரது மகன் தனுஷ் ராஜ் (வயது 18). இவர், தனது தாயார் ராதாவுடன் வசித்து வருகிறார்.

தனுஷ் ராஜ், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவருக்கும், தனுஷ் ராஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக ரோஷணை சோலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவர் தனுஷ் ராஜியிடம் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதமாக கல்லூரிக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்த தனுஷ் ராஜ் கடந்த 18-ந்தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

உள்ளிருப்பு போராட்டம்

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள், திடீரென கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட தனுஷ் ராஜை மீண்டும் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, மாணவர்களிடம் கல்லூரியின் துணை முதல்வர் நாராயணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா, சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது,  தனுஷ் ராஜ் மீண்டும் கல்லூரியில் சேர்க்கப்படுவார் என உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்