திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஆசிரியரின் மனைவி

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனுகொடுக்க வந்த ஆசிரியரின் மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-20 15:59 GMT
திருப்பத்துர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனுகொடுக்க வந்த ஆசிரியரின் மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்துர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் பொதுமககள் நிலப்பட்டா, சிட்டா அடங்கல், மின் இணைப்பு, முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், வேலை வாய்ப்பு, குடிநீர் வசதி, இலவச வீட்டு மனை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கேட்டு 495 பேர் மனு அளித்தனர்.

 மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சின்னமோட்டூர் ஊராட்சி காளையன் வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் எங்கள் பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதிக்கு பொதுவான தார் சாலையை அதேபகுதியை சேர்த்த சிலர் ஆக்கிரம்பு செய்துள்ளனர். இதனால் அந்த வழியில் செல்லும் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதும், பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகளை விரட்டுகின்றனர். எனவே அந்த சாலையை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெண் தீக்குளிக்க முயற்சி

வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந் பர்வீன்பானு (வயது 38) என்பவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் தீக்குளிப்பதற்காக தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தன் மீது ஊற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் பர்வீன் பானுவிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவரை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாணியம்பாடியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஒன்றில் தனது கணவர் ஜாபர் சையத் என்ற புர்ஹானுல்லா 1998-ம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அதற்காக அவர் குறிப்பிட்ட பணம் வழங்கி உள்ளார். மேலும் பள்ளி நிர்வாகம் பணம் கேட்டதாகவும், அதனை கொடுக்க முடியாத காரணத்தால் பள்ளி நிர்வாகம் 2007-ம் ஆண்டு அவரை பணியில் இருந்து நீக்கியது. இதனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஊதியம் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரைக்கும் ஊதியம் வழங்கவில்லை. இது குறித்து துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை இதனால் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தகாக போலீசாரிடம் தெரிவித்தார். 

அதைத்தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற பெண்ணை திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்