வீடுகளுக்கான மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வசூலிப்பத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
வீடுகளுக்கான மின்கட்டணத்திற்கும் ஜி.எஸ்.டி. வசூலிப்பத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர்
வீடுகளுக்கான மின்கட்டணத்திற்கும் ஜி.எஸ்.டி. வசூலிப்பத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. வசூல்
தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வீடு, கடை, தொழிற்சாலைகளுக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் மின்சாரத்திற்கு 2 மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று திருப்பத்தூரில் உள்ள மின்சார அலுவலகத்திற்கு மின்கட்டணம் செலுத்த பொதுமக்கள் சென்றனர். அப்போது மின்அட்டையில் இருந்த பணத்தை பொதுமக்கள் செலுத்திய போது கூடுதலாக ஜி.எஸ்.டி. கட்டணம் ரூ.18 செலுத்த வேண்டும் என அங்கிருந்த ஊழியர்கள் கூறினர்.
இதனால் பொதுமக்கள் மின்சாரத்திற்கும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டுமா எனகேட்டு, சிலர் பணம் கட்டினர். ஒருசிலர் பணம் கட்டாமல் திரும்பிசென்றனர். திடீரென மின்சார கட்டணத்திற்கும் ஜி.எஸ்.டி வசூல் செய்ய ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கைவிட வேண்டும்
ஏற்கனவே விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல இன்னல்களை பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர். சில வீடுகளில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பதால் அதிக மின் கட்டணம் வருகிறது. இதனால் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் திடீரென மின்கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஜி.எஸ்.டி. வசூல் செய்வதை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, பொருட்கள் வாங்கும்போது அனைத்திற்கும் ஜி.எஸ்.டி. செலுத்துகிறோம். மின்வாரியத்தில் இதுவரை இல்லை. தற்போது ஜி.எஸ்.டி. வசூலிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்றனர்.