கிருஷ்ணகிரி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
கிருஷ்ணகிரி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
கிருஷ்ணகிரி, டிச.21-
கிருஷ்ணகிரியில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
ஆருத்ரா தரிசன விழா
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கிருஷ்ணகிரி பழையபேட்டை கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை யொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், நடராஜ மூலமந்திர ஹோமம் ஆகியவை நடந்தது.
நேற்று காலை 4.30 மணிக்கு விஷேச திரவிய திருமஞ்சனமும், காலை 7 மணிக்கு திருவெம்பாவை உற்சவம், கோபுரதரிசனம், தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியனவும் நடந்தது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் வந்து பொதுமக்களுக்கு அருள்பாலித்தார்.
சந்திரமவுலீஸ்வரர் கோவில்
அதேபோல் கிருஷ்ணகிரி பழையபேட்டை சோமேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை, பார்வதி சமேதமாய் சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் வந்து சிவன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதேபோல புதுப்பேட்டை சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சோமேஸ்வரர் கோவில்
ஓசூர் ராம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசோமேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை யொட்டி கோவிலில் எழுந்தருளியுள்ள மூலவர் சிவபெருமானுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் நடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
பின்னர் மூலவர் சிவபெருமான் மலர்களாலும், வஸ்திரங்களாலும்அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். இதேபோல், ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளிட்ட சிவ ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனத்தை யொட்டி சிறப்பு பூஜைகள் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன.