ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தில் 29 பேருக்கு வாந்தி-மயக்கம்
ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தில் 29 பேருக்கு மீண்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மாவட்ட கலெக்டர் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் ஊராட்சியில் சுமார் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராமத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி கிராமத்தை சேர்ந்த சுமார் 90 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், லட்சிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.
அதில், சமீபத்தில் பெய்த பலத்த மழைக்கு தேங்கிய மழைநீர் கலந்த குடிநீரை பருகியதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பின்னர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, டேங்கர் லாரிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
29 பேருக்கு வாந்தி, மயக்கம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கிராமத்தை சேர்ந்த 29 பேருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே இவர்களை ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
இவர்களில் 5 பேர் ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திகளிலும், 2 பேர் சென்னை ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீதமுள்ள 22 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ளோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று பேரண்டூர் கிராமத்துக்கு சென்று, வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டார். டேங்கர் லாரிகளில் வினியோகிக்கப்படும் குடிநீர் மாதிரியை பரிசோதனை செய்தார்.
புதிய குழாய்கள்
பின்னர் கலெக்டர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் பேசியதாவது:- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் அனைத்து குழாய்களும் அகற்றப்பட்டு புதிய குழாய்களும் அமைக்கப்படும். கிராம பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மலம், மூத்திர மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றின் முடிவுகள் வந்த பிறகுதான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும். அதுவரை கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால், வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் உடன் இருந்தனர்.