உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-12-20 14:38 GMT
தேனி: 


குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். இதில் மொத்தம் 307 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மனு கொடுக்க வந்த சிலர் ஆர்ப்பாட்டம் செய்து பின்னர் மனு கொடுத்தனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அரண்மனைப்புதூர், குப்பிநாயக்கன்பட்டி, காமாட்சிபுரம் ஆகிய ஊர்களில் வசிக்கும் குறிப்பிட்ட சில சமுதாய மக்கள் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறியும், இந்த சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை மதுரை போலீசார் திடீரென அழைத்துச் சென்றதால் அவரை விடுவிக்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ‘ஜெய் பீம்' திரைப்படம் பாணியில் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்வதாக கோஷங்கள் எழுப்பினர். இதில், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் கதிரப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள்
இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படுவதுபோல், தமிழகத்திலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கம்பம் வட்டார முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகிகள் உள்பட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். 
சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை போன்ற உதவித்தொகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

சி.பி.ஐ. விசாரணை
அதுபோல், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பாச்சலூரில் பள்ளி மாணவி பிரித்திகா (வயது 10) எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் பந்தல்ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
கண்டமனூரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘30 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருக்கும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர். அகில இந்திய சட்ட உரிமைக்கழக நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ‘தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படாமல் உள்ள அம்மா உணவகத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு
உத்தமபாளையம் அருகே முத்துலாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைத்தால் பெண்கள், மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியிருந்தனர்.
இதுபோல், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜன் மற்றும் நிர்வாகிகள் சிலர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தேனி மாவட்டத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அதுபோல், தேனி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் கலீலூர் ரகுமான் தலைமையில் நிர்வாகிகள் சிலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "தேனி மாவட்டத்தில் இந்து முன்னணியை சேர்ந்த சிலர், சில மாதங்களாக முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்