உக்கடம் மேம்பால பணிக்காக 96 வீடுகள் இடிப்பு

உக்கடம் மேம்பால பணிக்காக 96 வீடுகள் இடிப்பு

Update: 2021-12-20 14:32 GMT

கோவை

உக்கடம் மேம்பால பணிக்காக 96 வீடுகள் இடிக்கப்பட்டன. அங்கு குடியிருந்த சலவை தொழிலாளர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

உக்கடம் மேம்பால பணிகள்

கோவையில் உக்கடம் போலீஸ் நிலைய பகுதியில் இருந்து ஆத்துப் பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உக்கடம்-பைபாஸ் சாலையில் ஏறுதளம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. 

அந்த பகுதியில் தூய்மை மற்றும், சலவைத்தொழிலாளர் குடியிருப்புகள், சலவை செய்யும் மையம் ஆகியவை இருந்தன. 

இதில், தூய்மை பணியாளர்களின் வசித்த குடியிருப்புகள்  ஏற்கனவே இடிக்கப்பட் டன. அவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

இது போல் சலவை தொழிலாளர்களுக்கு மாற்று வீடுகள் மற்றும் சலவை மையம் ஆகியவை புல்லுக்காடு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

96 வீடுகள் இடித்து அகற்றம்

இதைத்தொடர்ந்து சலவை தொழிலாளர்களின் பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணி நேற்று நடைபெற்றது. 

நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் மணிவண்ணன், மாநகராட்சி உதவி நகரமைப்பு பிரிவு அதிகாரி பாபு, போலீஸ் உதவி கமிஷனர் வீரபாண்டியன் மற்றும் போலீசாரின் மேற்பார்வையுடன் நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளை இடித்து அகற்றினார்கள்.

 மேம்பால பணிக்காக அங்கிருந்த மொத்தம் 96 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, உக்கடம் மேம்பால பணிக்காக வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

தூய்மை பணியாளர் குடியிருப்பிலும் இன்னும் சில வீடுகள் இடிக்கப் பட வேண்டியது உள்ளது. அதைத்தொடர்ந்து மேம்பால பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்