உத்திரமேரூரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2021-12-20 13:44 GMT
முகாமுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு வேளாண் துறை சார்பில் 10 நபர்களுக்கு தார்ப்பாய், மர விதை உள்ளிட்டவைகள் வழங்கினார். மேலும் வீட்டுமனை பட்டா 20 பேருக்கும், 19 நபர்களுக்கு ரேஷன் கார்டு, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை 10 பேருக்கும், வீடு கட்டும் திட்டத்தில் 24 பயனாளிகளுக்கு பணி ஆணை உள்ளிட்ட ரூ.10 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், தாசில்தார் தாண்டவமூர்த்தி, மாவட்ட குழு தலைவர் மனோகரன், மாவட்ட குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார், உத்திரமேரூர் ஒன்றிய குழுத்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைத் தலைவர் வசந்திகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்