ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் முறையீடு

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் முறையிட்டனர்.

Update: 2021-12-20 13:24 GMT
சீர்காழி:-

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் முறையிட்டனர். 

ஒன்றியக்குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் இளங்கோவன், அருண்மொழி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சுமதி வரவேற்றார். 
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- 
துர்காமதி (தி.மு.க.):- கொண்டல், வள்ளுவக்குடி, மருதங்குடி ஆகிய ஊராட்சிகளில் சேதம் அடைந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கூடுதலாக கைப்பம்புகள் அமைக்க வேண்டும். 
விசாகர் (தி.மு.க.):- சட்டநாதபுரம் ஊராட்சியில் சேதம் அடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும். 
தென்னரசு (தி.மு.க.):- ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கும் அரிசி தரமற்றதாக உள்ளது. இந்த அரிசியை கால்நடைகள் கூட திண்ணுவது கிடையாது. எனவே தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் வளர்ச்சி பணிகள்

அறிவழகன் (சுயேச்சை):- ராதாநல்லூர் ஊராட்சியில் ரேஷன் கடைகள், நூலக கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும். 
பஞ்சுகுமார் (தி.மு.க.):- உறுப்பினர்களுக்கு கூடுதல் வளர்ச்சி பணிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 
நடராஜன் (அ.தி.மு.க.):- திருநகரி ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக அலுவலகம் கட்ட வேண்டும். நெப்பத்தூர் அரசு உதவி பெறும் பள்ளி கட்டிடம் அபாய நிலையில் உள்ளது. தொடர் மழையால் சேதம் அடைந்த விளைநிலங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை. ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவது இல்லை. தரமான அரிசி வழங்க வேண்டும். எனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவேன்.

இரங்கல் தீர்மானம்

ரீமா ராஜ்குமார் (அ.தி.மு.க.): உறுப்பினர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு விவாதம் நடந்தது. 
முன்னதாக குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி மற்றும் வீரர்களுக்கு அஞ்சலி ெசலுத்தப்பட்டு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, மேலாளர் சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்