காற்று மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, பஸ்சில் அலுவலகம் சென்றார்
காற்று மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, பஸ்சில் அலுவலகம் சென்றார்.
மயிலாடுதுறை:-
காற்று மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, பஸ்சில் அலுவலகம் சென்றார்.
பஸ்சில் சென்ற கலெக்டர்
மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களால் காற்று மாசடைவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சைக்கிள் பயன்பாடு, பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று காலை தனது முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு பஸ்சில் ெசன்றார்.
முன்னதாக அவர் தரங்கம்பாடி சாலையில் கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகம் எதிரே 5 நிமிடம் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த டவுன் பஸ்சில் ஏறி பொதுமக்களுடன் நின்றபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி பயணித்தார்.
இயற்கை பேரிடர்
1½ கிலோ மீட்டர் தூரம் பஸ்சில் பயணம் செய்த கலெக்டர், மயூரநாதர் கீழவீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 250 மீட்டர் தூரம் நடந்து சென்று அலுவலகத்தை அடைந்தார்.
இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காற்று மாசு காரணமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. இதனை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அலுவலர்கள் வாரத்தில் ஒரு நாள் தனி வாகனத்தில் செல்லாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்தியோ, நடந்தோ அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி இன்று(அதாவது நேற்று) நான் பஸ்சில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தேன். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சிறிய முயற்சி
இது என்னால் முடிந்த சிறிய முயற்சிதான். இதுபோன்ற சிறிய முயற்சி நிச்சயமாக பெரிய அளவில் பலனளிக்கும். பூமியை பாதுகாக்க அனைவருடைய பங்கேற்பும் இருக்க வேண்டும். வாரந்தோறும் திங்கட்கிழமை மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலர்களும், பொதுபோக்குவரத்தை பயன்படுத்தியோ, சைக்கிளிலோ, நடந்தோ அலுவலகத்துக்கு செல்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஸ்சுக்காக கலெக்டர் காத்திருந்ததையும், பஸ்சில் நின்று கொண்டே பயணம் செய்ததையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.