கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு; 8 பேர் கைது

கத்தி முனையில் மிரட்டி செல்போன், ரொக்கப்பணம் போன்றவற்றை பறித்து கொண்டு, வந்த ஆட்டோவிலேயே கண்இமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டனர்.;

Update: 2021-12-20 13:09 GMT
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). கட்டிட தொழிலாளியான இவர், மீன் வாங்குவதற்காக கோவளத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, ஒரு ஆட்டோவில் இவரை பின் தொடர்ந்து வந்த 8 பேர் திடீரென வேல்முருகனை வழிமறித்தனர்.

பின்னர் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன், ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் போன்றவற்றை பறித்து கொண்டு, வந்த ஆட்டோவிலேயே கண்இமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து வேல்முருகன் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக சக்கரவர்த்தி வழக்குப்பதிவு செய்தனர்.

மர்ம நபர்கள் வந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் கண்ட போலீசார் தாம்பரம், மண்ணிவாக்கம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் பதுங்கி இருந்த மண்ணிவாக்கம், முடிச்சூர் பகுதிகளை சேர்ந்த பாரத் (19), விஷால் (19), சந்தோஷ் (19) மற்றும் 18 வயதான 4 பேர், 17 வயதான ஒருவர் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்