100 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தவறவிட்ட 100 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.;
ஜோலார்பேட்டை
பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தவறவிட்ட 100 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.
செல்போன்கள் மீட்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அந்தந்தப் போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று, அதன் விவரங்களை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.
அதன்பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார், தலைமை காவலர்கள் கங்காதேவி, மஞ்சுளா அடங்கிய குழு அந்த மனுக்கள் சம்பந்தமாக துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் 100 செல்போன்களை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.17 லட்சத்து 10 ஆயிரத்து 800 ஆகும்.
சைபர் கிரைம் போலீசார் மீட்ட 100 செல்போன்களை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி பால்நாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
அதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பங்கேற்று சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:-
3-வது நபர் காட்டும் இனக்கவர்ச்சி
திருட்டு செல்போன்களை விற்பனை செய்துவம், அதை வாங்கி சிம் கார்டு போட்டு உபயோகிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது சம்பந்தமாக எந்த ஒரு தகவலும் கிடைக்கப் பெற்றால் உடனடியாக அருகாமையில் உள்ள அந்தந்த காவல் நிலையத்துக்கு புகார் தெரிவிக்க வேண்டும். இதனால் உரியவர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
தற்போது அனைவருக்கும் செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் நிலையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பெற்றோர்களிடம் இருந்து முழுமையான அன்பு கிடைக்கப் பெறாமல் மூன்றாவது நபர் காட்டும் இனக்கவர்ச்சி அன்பால் பெண் பிள்ளைகள் வாழ்க்கையில் தடம்புரண்டு செல்கின்றனர்.
எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் இன்ஸ்பெக்டர், செல்போன்களை பெற வந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.