கோவளம் வடிநில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்

கோவளம் வடிநில பகுதியில் ஜெர்மன் நாட்டு நிதி உதவியுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2021-12-20 12:07 GMT
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மழைநீர் வடிகால் பணி

பருவ மழை காலங்களில் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் தென் சென்னையின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான ராம்நகர், மடிப்பாக்கம், குபேர நகர், ராஜேஷ் நகர், பள்ளிக்கரணை, காரப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் கோவளம் வடிநில பகுதியில் ரூ.1,714 கோடியில் ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதன்படி கோவளம் வடிநில பகுதி எம்-1, எம்-2, எம்-3 என 3 திட்ட கூறுகளாக பிரிக்கப்பட்டு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி, தொழில்நுட்ப வல்லுனர் குழு மூலமாக வடிவமைக்கபட்டு, மழைநீர் கடத்தும் திறனை கணினி மென்பொருள் மூலமாக ஆய்வு செய்து இறுதி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. எம்-1 திட்ட கூறுவில் உள்ள ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் மிகவும் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளான கண்ணன் காலனி, நேரு காலனி, நங்கநல்லூர் பி.வி.நகர், இந்து காலனி, சீனிவாசா நகர், ராம் நகர், குபேந்திரன் நகர், சதாசிவம் நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ.150.45 கோடி செலவில்...

இந்த பகுதிகளில் உள்ள 139 தெருக்களில் 27.20 கி.மீ நீளத்துக்கு புதிய மழைநீர் வடிகால்களும், 95 தெருக்களில் 12.60 கி.மீ நீளத்துக்கு பழுதடைந்த மழைநீர் வடிகால்களை மறுசீரமைக்கும் பணிகளும் என மொத்தம் 234 தெருக்களில் 39.80 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.150.45 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விரைவில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இதன் மூலம் இப்பகுதிகளில் வரும் மழைகாலங்களில் மழைநீர் தேங்குவது முற்றிலும் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்