‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-20 10:49 GMT
பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேரடி தெருவில் பழுதடைந்த நிலையில் மின்கம்பம் இருக்கும் செய்தி, ‘தினத்தந்தி புகார் பெட்டி மூலமாக சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் தங்களுக்கே உரிய விரைவான நடவடிக்கையை கையாண்டு பழுதடைந்த கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பத்தை நட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்காக மின்வாரியத்துக்கும், தினத்தந்தி பத்திரிகைக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 



கழிவுநீர் தொல்லையால் அவதி

சென்னை எம்.ஜி.ஆர். நகர் தாமோதர விநாயகர் கோவில் தெருவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால் துர்நாற்றத்துடன், அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. மக்கள் பெரும் அவதியுறுகிறார்கள். இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- சமூக ஆர்வலர்கள், எம்.ஜி.ஆர். நகர். 

ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை கோடம்பாக்கம் புலியூர்புரம் பஜனை கோவில் தெருவில் மின் இணைப்பு பெட்டி பராமரிப்பின்றி இருக்கிறது. கதவு பெயர்ந்த நிலையிலும், வயர்கள் நீட்டிக்கொண்டிருக்கும் நிலையிலும் ஆபத்தான முறையில் காட்சியளித்து வருகிறது. எனவே மக்கள் பாதுகாப்பு கருதி இந்த மின் இணைப்பு பெட்டியை உடனடியாக சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- சமூக ஆர்வலர்கள், கோடம்பாக்கம்.




சரிந்து கிடக்கும் மின்கம்பம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சதாசிவம் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி முறிந்ததின் காரணமாக, கம்பம் அப்படியே சரிந்து கிடக்கிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த நிலை தொடருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

- விஜய், சிந்தாதிரிப்பேட்டை. 

மூடப்படாத வடிகால்வாய் தரும் ஆபத்து

சென்னையை அடுத்த அய்யப்பந்தாங்கல் பெரிய கொளுத்துவாஞ்சி கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடப்படாமல் இருக்கிறது. இதில் அடிக்கடி கால்நடைகள் விழும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பலமுறை மனு அளித்தும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சமீபத்தில் கூட ஒரு பசுமாடு அந்த கால்வாயில் விழுந்து பரிதவித்த சம்பவம் வேதனையளிப்பதாக அமைந்தது.

- சமூக ஆர்வலர்கள், அய்யப்பந்தாங்கல்.

கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர்

சென்னை மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவில் பழுதடைந்த பொது கழிப்பறை உள்ளது. இக்கழிப்பறை வளாகத்தில் இருந்து கழிவுநீர் கசிந்து, அருகேயுள்ள குடியிருப்புகளில் செல்லும் அவலம் நிலவுகிறது. இதனால் துர்நாற்றம் நிலவி, சுகாதார சீர்கேட்டில் அப்பகுதியினர் பாதிக்கப்படுகிறார்கள். நோய்கள் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

சமூக ஆர்வலர்கள், மயிலாப்பூர். 




ஆபத்தான இரும்பு தகடுகள் அகற்றப்படுமா?

சென்னை முகப்பேர் (மேற்கு) 7-வது பிளாக் ஜியோன் தெருவில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இவை துர்நாற்றத்தை ஏற்படுத்தி சுகாதார சீர்கேட்டையும் விளைவிக்கிறது. இதுபோதாதென சாலையோர இரும்பு தகடுகள் ஆபத்தான முறையில் சரிந்து கிடக்கின்றன. தேவையற்ற அசம்பாவிதங்கள் நேரும் முன்பாக இந்த போக்கு தவிர்க்கப்பட வேண்டும். பலமுறை மாநகராட்சியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

- என்.சுடலைமணி, முகப்பேர் மேற்கு. 



பழுதடைந்த மின்கம்பம்

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரியில் உள்ள ராமகிருஷ்ணா மடம் எதிரில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து இருக்கிறது. கம்பத்தின் சிமெண்ட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. கம்பத்தின் மேல்பகுதி துண்டாக விழுந்து விடுவது போல இருக்கிறது. மின்வாரிய அதிகாரிகள் உடனடி கள ஆய்வு மேற்கொண்டு இந்த மின்கம்பத்தை சீரமைக்கவோ அல்லது மாற்றி அமைத்திடவோ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- பொதுமக்கள், அனுமந்த புத்தேரி. 

சிரமம் தீருவது எப்போது?

செங்கல்பட்டு மாவட்டம் புதுபெருங்களத்தூர் அன்பு நகர் கக்கன்ஜி தெருவில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் தண்ணீர் தொட்டிக்கு செல்லும் மின் கம்பி அறுந்து விட்டது. இதை பெருங்களத்தூர் நகராட்சி நிர்வாகத்திடம் புகாராகவும் அளித்துள்ளோம். ஆனால் இன்னும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. எங்கள் சிரமம் தீருவது எப்போது?

- பொதுமக்கள், கக்கன்ஜி தெரு. 

பன்றிகள் அட்டகாசம் தாங்கமுடியல...

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட மிட்டணமல்லி, முத்தாபுதுப்பேட்டை குடியிறுப்பு மற்றும் பஜார் பகுதிகளில் பன்றிகள் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. இதனால் அப்பகுதிவாசிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். குழந்தைகள், முதியோர் வெளியே செல்லவே அச்சப்படுகிறார்கள். இந்த பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- முத்தரசு, திருவள்ளூர். 

நாய்கள் தரும் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை சாலையில் நாய்கள் தொல்லை மிகுதியாகவே இருக்கிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி துரத்துகிறது. சிறுவர்-சிறுமிகள், முதியோர் சாலையில் செல்லவே பயப்படுகிறார்கள். நாய்கள் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

- திவ்யா, செவ்வாய்பேட்டை. 

மேலும் செய்திகள்