செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள முந்திரி தோட்டத்தில் கதண்டுகள் கூடுகட்டியுள்ளன. இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் குடியிருந்து வரும் அஞ்சப்பன், சக்கரவர்த்தி, சின்னகுஞ்சு, வடிவேல் மற்றும் சிலரை கதண்டுகள் கடித்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களை உறவினர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் கதண்டுகளை அழிக்க தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.