நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
இணையதளம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையம்
எதிர்வரும் சம்பா பருவத்திற்கு விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது செல்போன் எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு நசியனூர் ரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகத்தை அணுகலாம்.
மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.