ஆசனூர் அருகே 2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் புதிய பள்ளிக்கட்டிடம்; திறக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை

ஆசனூர் அருகே கடந்த 2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் புதிய பள்ளிக்கட்டிடத்தை திறக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-12-19 20:47 GMT
தாளவாடி
ஆசனூர் அருகே கடந்த 2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் புதிய பள்ளிக்கட்டிடத்தை திறக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதிதாக பள்ளிக்கட்டிடம் 
தாளவாடி ஒன்றியம் ஆசனூர் அருகே உள்ள திங்களூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி கோட்டமாளம் மலைக்கிராமம். இந்த கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கூடத்தை உயர்நிலைப்பள்ளிக்கூடமாக தரம் உயர்ந்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மலைவாழ் மக்கள் கோரிக்கையை ஏற்று அந்த பள்ளிக்கூடம் கடந்த 2011-ம் ஆண்டு உயர்நிலை பள்ளிக்கூடமாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் அது மேல்நிலைப்பள்ளிக்கூடமாக தரம் உயர்த்தப்பட்டது. 
இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நபார்டு திட்டத்தின் மூலம் புதிதாக பள்ளிக்கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 65 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து புதிதாக பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பள்ளிக்கட்டிடம் இதுவரை திறக்கப்படவில்லை. 
ஆபத்தான நிலையில்...
இந்த பள்ளிக்கட்டிடம் திறக்கப்படாததால் செலுமிதொட்டி, வைத்தியநாதபுரம், கோட்டமாளம், அணைக்கரை போன்ற மலைகிராமத்தை சேர்ந்த 220-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அந்த பகுதியில் உள்ள நடுநிலை பள்ளிக்கட்டிடத்தில் தற்போது படித்து வருகின்றனர். தொடர் மழையால் அந்த பள்ளிக்கட்டிடம் வலுவிழந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘பள்ளிக்கூட கட்டிடத்தின் முன்புறம் உள்ள சிலாப்பில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது.
திறக்க வேண்டும்
 கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் அந்த கட்டிடத்தில் மாணவ-மாணவிகள் உட்கார்ந்து படிக்க போதிய இடவசதியும் இல்லை. 
எனவே பள்ளி மாணவ- மாணவிகள் நலன் கருதி கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் புதிய பள்ளிக்கட்டிடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

மேலும் செய்திகள்