ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - சிறுவன் சாவு; மூவர் கவலைக்கிடம்
சிக்பள்ளாப்பூர் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர். இதில் சிறுவன் உயிரிழந்தான். 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சிக்பள்ளாப்பூர்:
மயங்கி கிடந்தனர்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா நாராயணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 45). இவரது மனைவி அனுமக்கா(36). இந்த தம்பதியின் மகன்கள் முனிராஜ்(18), முரளி(15). இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் மஞ்சுநாத்தின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்த போது மஞ்சுநாத், அனுமக்கா, முனிராஜ், முரளி ஆகியோர் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிந்தாமணி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று போலீசார் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் முரளி இறந்து விட்டார்.
சாவு
மேலும் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதனால் அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மஞ்சுநாத் தனது குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும், அதில் முரளி இறந்ததும் தெரியவந்தது. ஆனால் தற்கொலை முயற்சிக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மேலும் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உணவே விஷமாக மாறியதால் 4 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து பாகேபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.