குமரி மாவட்டத்தில்3½ லட்சம் பேர் முதல் கட்ட தடுப்பூசி போடவில்லை

குமரி மாவட்டத்தில் இன்னும் 3½ லட்சம் பேர் முதல் கட்ட தடுப்பூசி கூட செலுத்தவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-12-19 20:30 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்னும் 3½ லட்சம் பேர் முதல் கட்ட தடுப்பூசி கூட செலுத்தவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒமைக்ரான் பாதிப்பு
உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி எடுத்த கொரோனா தொற்று இன்னும் நீங்கவில்லை. வெவ்வேறு உருமாற்றங்களை பெற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது ‘ஒமைக்ரான்’ என்ற பெயரில் அது உருமாற்றம் பெற்றுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு நமது நாட்டிலும் இருந்து வருகிறது.
கொரோனா தொற்றினால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கவும், இறப்புகள் ஏற்படுவதை தடுக்கவும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும், வீடு வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 
23 சதவீதம் பேர்
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 19 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தடுப்பூசி செலுத்த தகுதியான 18 வயதுக்கு மேற்பட்டோரில் இன்னமும் 23 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக (18 வயதுக்கு மேற்பட்டோர்) குமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 11 ஆயிரத்து 200 பேர் இருப்பதாக சுகாதாரத்துறையினரால் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் கடந்த 17-ந் தேதி வரை 3 லட்சத்து 46 ஆயிரத்து 658 பேர் இதுவரை முதல் கட்ட தடுப்பூசி செலுத்தாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 
5.71 லட்சம் எண்ணிக்கை
இதேபோல் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்த பின்னரும் 2 லட்சத்து 24 ஆயிரத்து 325 பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 983 பேர் முதல் மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 32,273 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.  அனைவருக்கும் தடுப்பூசி போடும் முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராம பஞ்சாயத்துக்களுக்கு அரசு சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம பஞ்சாயத்துக்களில் மக்கள் பிரதிநிதிகளும், சுகாதாரத்துறையினரும் இணைந்து தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதேபோல் நகர்ப்புறங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளும், சுகாதாரத்துறையினரும் இணைந்து தடுப்பூசி போடும் பணியில் முனைப்புக் காட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்