மதுபோதையில் தகராறு; வாலிபர் வெட்டிக்கொலை
சிலைமான் அருகே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
புதூர்,
சிலைமான் அருகே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வெட்டிக்கொலை
சிவகங்கை மாவட்டம் பாட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து விஜய் (வயது 27). இவர் மதுரை சிலைமான் போலீஸ் எல்லைக்குட்பட்ட மூத்தான்குளம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சத்யா நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் முத்துவிஜய் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த ஒரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்த தரப்பினர் முத்து விஜயை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
7 பேரை பிடித்து விசாரணை
சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் ஊமச்சிகுளம் துணை சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மதுபோதையில் முத்து விஜய் வெட்டிக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.