‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. விபத்துகளும் அவ்வப்ே்பாது நடக்கிறது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
தமிழ்செல்வி, ராமச்சந்திரபுரம்.
ஆபத்தான மேல்நிலை தொட்டி
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த நாவினிபட்டி ஊராட்சி நா.கோவில்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இது கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. அடிப்பகுதியில் ஆங்காங்கே உடைந்து உள்ளன. எப்போது இடிந்து விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைக்க வேண்டும்.
விஜய், நாவினிபட்டி.
வாகன ஓட்டிகள் அவதி
மதுரை கே.கே. நகர் சுந்தரம் பார்க்கில் இருந்து மாட்டுத்தாவணி காய்கறி மார்க்ெகட் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி இந்த சாலையை சீரமைப்பார்களா?
தட்சிணாமூர்த்தி, மதுரை.
நாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கற்பகம் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவைகள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
சசிகுமார், திருமங்கலம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை வைகை தென்கரை சாலையில் குரு தியேட்டர் அருகில் உள்ள பாலத்தின் கீழ் கழிவுநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், வைகைதென்கரை.
சாலையில் ஓடும் கழிவுநீர்
ராமநாதபுரம் நகரில் பல பகுதிகளில் பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலைகளில் ஆறுபோல ஓடுகிறது. துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாகிறது. கொசுக்கடியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் உடனடியக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், ராமநாதபுரம்.