நாடியம்மன் கோவில் ஏரிக்கரை நடைபாதை சீரமைக்கப்படுமா?
குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் ஏரிக்கரை நடைபாதை சீரமைக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பட்டுக்கோட்டை:
குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் ஏரிக்கரை நடைபாதை சீரமைக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நாடியம்மன் கோவில்
பட்டுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான ஏரி சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆக்கிரமிப்புகளால் இந்த ஏரி சுருங்கி குளமாகி தற்ேபாது ஓடை போல காட்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பரவலாக பெய்த மழையால் நாடியம்மன் கோவில் ஏரியில் தற்போது நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
பட்டுக்கோட்டை நகர மக்கள் குளிப்பதற்கு நாடியம்மன் கோவில் ஏரிக்கு அதிக அளவில் வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஏரி தூர் வாரப்படாததால் ஆகாயதாமரை கொடிகள் படர்ந்து கரையோரங்களில் கோரைப்புற்கள் வளர்ந்து மக்கள் குளிக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக அய்யப்பன் கோவிலில் இருந்து நாடியம்மன் கோவில் வரை உள்ள நடைபாதையில் பதிக்கப்பட்டிருந்த நடைமேடை டைல்ஸ் உடைந்து காணப்படுகிறது.
குடமுழுக்கு
ஏரிக்கரையில் உள்ள கோரைப்புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதைக்கும் ஏரிக்கும் இடையில் விழுந்து கிடக்கும் இரும்பு தடுப்பு வேலியை சீரமைக்கவேண்டும். 20 ஆண்டுகளுக்கு பிறகு பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதால் மேற்கண்ட குறைகளை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.