சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி; உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை குழு அமைப்பு
நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 90 ஆபத்தான பள்ளிக்கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.;
நெல்லை:
நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 90 ஆபத்தான பள்ளிக்கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
3 மாணவர்கள் பலி
நெல்லை எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி திடல் எதிரே அமைந்துள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து அன்பழகன், சுதீஷ், விஸ்வரஞ்சன் ஆகிய 3 மாணவர்கள் பலியானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
விசாரணை குழு
இந்த நிலையில் பள்ளியின் கட்டிட விபத்து குறித்து உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை குழு அமைத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 'நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17-ந் தேதி காலை 11 மணி அளவில் கழிவறை முன்பக்க தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உள்ளடக்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் ஆய்வு செய்து விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு அலுவலர்கள்
இதற்கிடையே தமிழகம் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை கணக்கெடுக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் நெல்லை மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய 4 குழுக்களும், ஊரகப்பகுதியில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய 14 குழுக்களும் அமைத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். நெல்லை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை 48 மணி நேரத்தில் கண்டறிந்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.
90 ஆபத்தான கட்டிடங்கள்
இந்த 18 குழுவினரும் நேற்று முன்தினம் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆய்வை தொடங்கினர். முதல் நாளில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடத்தினார்கள்.
இதில் 90 பள்ளிக்கூடங்களில் கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். அவற்றை இடித்து அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று நாங்குநேரி யூனியன் பட்டர்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
2-வது நாளாக ஆய்வு
நேற்று 2-வது நாளாக குழுவினர் பள்ளிகளில் காலை முதல் ஆய்வை தொடங்கி நடத்தினார்கள். ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வு செய்தனர். இதற்காக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.
நெல்லை டவுனில் உள்ள பள்ளிக்கூடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமையிலான குழுவினர் வகுப்பறை கட்டிடங்கள், கழிவறை கட்டிடங்களை ஆய்வு செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,535 பள்ளிகளில் நேற்று பெரும்பாலான பள்ளிகளில் ஆய்வு பணியை முடித்து விட்டனர். அந்த பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடங்கள் குறித்த அறிக்கையை இன்று (திங்கட்கிழமை) கலெக்டரிடம் சமர்ப்பிக்கிறார்கள்.
மாற்று கட்டிடங்கள்
மேலும் ஆபத்தான கட்டிடங்களை இடிக்கும்போது வகுப்புகளை எந்த இடத்தில் வைத்து நடத்தலாம். அதற்கு தேவையான மாற்று கட்டிடங்கள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து சமர்ப்பிக்கின்றனர்.
ஏதேனும் பள்ளிகள் விடுபட்டிருந்தால் இன்றும் ஆய்வு நடத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.