காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள்
காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மதுரையில் நேற்று தொடங்கியது.
மதுரை,
காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மதுரையில் நேற்று தொடங்கியது.
காவல்துறை விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வரவேற்றார். மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை சரக டி.ஐ.ஜி. காமினி, மதுரை மாநகர கமிஷனர் (தலைமையிடம்) ஸ்டாலின், துணை கமிஷனர் (போக்குவரத்து பிரிவு) ஆறுமுகச்சாமி, மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (சைபர் கிரைம்) மணி, மதுரை மாவட்ட ஆயுதப்படை துணை சூப்பிரண்டு விக்னேஸ்வரன், ஊர்க்காவல் படை தளவாய் ஆனந்த் மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி லெனின், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க உதவி தலைவர் சோலைராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு காவல்துறையில் நான்கு மண்டலங்கள் (வடக்கு மண்டலம், தென் மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம்) சென்னை மற்றும் ஆயுதப்படை போலீஸ், அதிவிரைவு கமாண்டோ படையை சேர்ந்த 120 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
டேக்வாண்டோ
இந்த விளையாட்டுப்போட்டியில் ஜூடோ, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக், கராத்தே, வாள்சண்டை, பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற இருக்கிறது. தொடக்க விழாவையொட்டி, காவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.
நேற்று நடந்த இந்த போட்டியில், மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்க செயலாளர் கருணாகரன், கராத்தே சங்க மதுரை மாவட்ட தலைவர் ராஜசேகர், ஜூடோ சங்க செயலாளர் புஷ்பநாதன், டேக்வாண்டோ மதுரை மாவட்ட தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.