தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2021-12-19 19:22 GMT
புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
கரூர் நகராட்சி பிட்டர் பழனியப்பன் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இருந்து சாக்கடை மண் அள்ளப்பட்டது. ஆனால் அந்த மண் அகற்றப்படாமல் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து  சாக்கடை மண்ணை அகற்றினர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், பிட்டர் பழனியப்பன் தெரு, கரூர். 

 கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் இறந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். எனவே செட்டிகுளம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
துரை, செட்டிகுளம், பெரம்பலூர். 
பெரம்பலூர் வட்டம், க.எறையூர்  கிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் அதிக அளவு தாக்குகிறது.  இதனால் ஆடு, மாடுகள் அதிகமாக இறந்து விட்டன. எனவே இதனை தடுக்க கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், க.எறையூர், பெரம்பலூர். 

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வாம்பாள்சமுத்திரம் (தெற்கு) கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள பிரதான சாலையின் குறுக்கே மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இவற்றில் பலமுறை சரக்கு வாகனங்கள் மோதி மின்கம்பி அறுந்து விழுந்தது பின்னர் அதனை சரிசெய்தனர். ஆனால் இது வரை அதனை உயர்த்தி கட்டி சரிசெய்யவில்லை.  பொதுமக்கள் நடமாட்டத்தின்போது மீண்டும் இதுபோல் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
செல்வராஜ், விஸ்வாம்பாள்சமுத்திரம், திருச்சி. 

பயனற்று உள்ள ஏ.டி.எம். மையங்கள் 
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், ஏலூர்ப்பட்டி பகுதியில் 3 ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணம் வருவது இல்லை. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள், வெளியூர் சென்று பணம் எடுக்கும் நிலையில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஏலூர்ப்பட்டி, திருச்சி. 

ஆபத்தான நிலையில் உள்ள அரச மரம் 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மஞ்சமேடு கிராமத்தில் சாலை ஓரத்தில் பட்டுப்போன நிலையில் காய்ந்த  அரசமரம் உள்ளன. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த அரசமரம் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பட்டுப்போன இந்த அரச மரத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரஞ்சித்குமார், மஞ்சமேடு, கரூர்.

அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு 
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் எல்லைக்குட்பட்ட பார்க்கவன் நகரில் சுமார் 25 வீடுகள் உள்ளன. இங்கு தெரு விளக்குகள் மற்றும் சாலை வசதிகள் ஏதும்‌இல்லை.  இதனால் மழைபெய்யும் போது சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள்  வெளியே சென்று வர பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
குமாரவேலு, பார்க்கவன் நகர், பெரம்பலூர். 

விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், வயலோகம் அருகே உள்ள நிலையப்பட்டியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் ஒன்று பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள்,  வயலோகம், புதுக்கோட்டை.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா? 
திருச்சி கரூர் சாலையில் பெட்டவாய்த்தலை வழியாக கடந்த 10 ஆண்டுகளாக  காலை, மாலை என இரு வேளையும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு வசதியாக தீரன் நகர் கிளையில் இருந்து ஜீயபுரம் அருகில் கடியாக்குறிச்சிக்கு சத்திரம்பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. கடியாக்குறிச்சிக்கு இயக்கபட்ட பஸ் சேவை கொரோனா நோய்தொற்று காரணமாக நிறுத்தபட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், முதியவர்கள் ஆகியோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெட்டவாய்த்தலை, திருச்சி. 

சாலையில் நடக்க அச்சம் 
திருச்சி தீரன்நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றி வருகின்றன. இவை திடீரென சாலையில் ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பணிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்லும்போது அவர்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்கவே அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தீரன்நகர், திருச்சி. 

பயனற்ற கழிவறை 
திருச்சி பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையின் கதவு உடைந்து காணப்படுவதால் அதனை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உள்ளே உள்ள கழிவறையின் உபகரணங்களும் உடைந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பயணிகள் பெரிதும்  அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

குண்டும், குழியுமான சாலைகள் 
திருச்சி பொன்நகர், செல்வநகர் பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் மூடி பகுதியில் பள்ளமாக இருப்பதினால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் இருக்கும் பள்ளம் தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பொன்நகர், திருச்சி. 

காட்சிப்பொருளான நீர்த்தேக்க தொட்டி 
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கறிக்கடை வீதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டி  உடைந்து, பல மாதங்களாக காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த உடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு மீண்டும் புதிய தொட்டி அமைத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அன்னவாசல், புதுக்கோட்டை.

மேலும் செய்திகள்