தெருவிளக்கு எரிகிறது
கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்-பெருமாங்குழி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பழுந்தடைந்து எரியாமல் இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் ெபட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து பழுதடைந்த விளக்குகளை மாற்றி புதிய விளக்குகள் அமைத்து எரிய வைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சீரமைக்க வேண்டிய சாலை
நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் இருந்து அனந்தனார் கால்வாய்க்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சகதியாக காட்சி அளிக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தம்பிராஜ், ராணித்தோட்டம்.
எரியாத விளக்குகள்
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் உள்ள விளக்குள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் நலன் கருதி புதிய மின் விளக்குகளை அமைத்து எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.மோகன்தாஸ், நுள்ளிவிளை.
விபத்து அபாயம்
ஆரல்வாய்மொழி, பெருமாள்புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாய நிலையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்து காணப்படும் சுவரை அகற்றி புதிய சுவர் அமைக்க வேண்டும்.
-செந்தமிழ்ச்செல்வி, ஆரல்வாய்மொழி.
வடிகால் ஓடை தேவை
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை அண்ணாநகர், பிஸ்மி நகர் சாலை உள்ளது. இந்த சாலையில் வடிகால் ஓடை அமைக்கப்படாததால் பல ஆண்டுகளாக கழிவுநீர் சாலையில் பாய்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், முதியோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-எம்.பீர்முகம்மது, அண்ணாநகர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
அஞ்சுகிராமம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிவசுப்பிரமணியபுரத்தில் சாலையோரம் நீரோடை இருந்தது. தற்போது இந்த நீரோடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை காலங்களில் ஓடையில் தண்ணீர் செல்ல முடியாமல் சாலையில் பாய்வதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ரஞ்சித் சிங், சிவசுப்பிரமணியபுரம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
அனந்தன் நகரையும், பார்வதிபுரத்தையும் இணைக்கும் ஆற்றங்கரை சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் சிலர் மருத்துவக்கழிவு, கோழிக்கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், ஆற்றில் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுகளை அகற்றுவதுடன் அவற்றை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏசுதாஸ், அனந்தன்நகர்.