வேலூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக அணைக்கட்டு வாலிபரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
வேலூர் நகைக்கடையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக அணைக்கட்டு வாலிபரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்
வேலூர் நகைக்கடையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக அணைக்கட்டு வாலிபரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்கடையில் கொள்ளை
வேலூர் தோட்டப்பாளையத்தில் காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 14-ந்தேதி நள்ளிரவு மர்மநபர்கள் 15 கிலோ தங்க நகைகள், ½ கிலோ வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், மர்மநபர் சிங்கபடம் உடைய முகமூடி மற்றும் தலையில் ‘விக்’ அணிந்து உள்ளே சென்று, ஒவ்வொரு கண்காணிப்பு கேமராக்களையும் பெயிண்டிங் ‘ஸ்பிரே’ மூலம் மறைப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மேற்பார்வையில் 8 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
வாலிபரிடம் விசாரணை
தனிப்படை போலீசார் வேலூர் மாநகர பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான செல்போன் எண்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இதேபோன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நகைக்கடை கொள்ளை தொடர்பாக அணைக்கட்டு அருகே உள்ள குச்சிப்பாளையத்தை சேர்ந்த 30 வயது வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வாலிபருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் காணப்பட்ட அவருடைய நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய அனைவரும் ஓரிரு நாளில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.