பூட்டிய வீட்டுக்குள் தூக்கில் பெண் பிணம்

மயிலாடுதுறையில், பூட்டிய வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-12-19 17:47 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில், பூட்டிய வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.1½ லட்சம்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் 2-வது மனைவி மாலதி (வயது 52). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் மாலதி கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தற்போது அவர் மயிலாடுதுறை வெள்ளான்தெருவில் கல்யாணம் என்பவரது வீட்டு மாடியில் 3 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வந்தார். அந்த வீட்டை வாடகைக்கு பிடித்து கொடுத்த ஸ்ரீதரிடம், வீட்டுக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.1½ லட்சம் கொடுத்துள்ளார். 
பின்னர் வீட்டு வாடகையை  கடந்த 3 மாத காலமாக ஸ்ரீதரே கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் கல்யாணம், மாலதியிடம் வீட்டுக்கு அட்வான்ஸ் கேட்டுள்ளார். அப்போதுதான் தான் கொடுத்த ரூ.1½ லட்சத்தை வீட்டுக்கு அட்வான்ஸ் ஸ்ரீதர் கொடுக்கவில்லை என்பது மாலதிக்கு தெரிய வருகிறது. இதையடுத்து பணத்தை ஸ்ரீதரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து வந்ததாக தெரிகிறது.
தூக்கில் பெண் பிணம்
இதுகுறித்து மாலதி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம்  அனு அளித்தார். இதையடுத்து மயிலாடுதுறை போலீசார் கடந்த 2-ந் தேதி ஸ்ரீதரையும், மாலதியையும் அழைத்து பேசினர். 10 நாட்களில் வீட்டை காலி செய்து கொள்வதாக மாலதியிடமும், வீட்டை காலி செய்யும் போது பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ஸ்ரீதரிடமும் போலீசார் எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் மாலதி வீட்டின் கதவு 2 நாட்களாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் கல்யாணம், மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தார்.
மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு மாலதி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். உடனே போலீசார் மாலதி உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாலதி தற்கொலை செய்வதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்