இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம்
கடைக்கண்விநாயகநல்லூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றிவிட்டு பதிதாக கட்டப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொள்ளிடம்:
கடைக்கண்விநாயகநல்லூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றிவிட்டு பதிதாக கட்டப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரேஷன் கடை கட்டிடம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடைக்கண்விநாயகநல்லூர் கிராமத்தில் ரேஷன்கடை கட்டிடம் உள்ளது. ஆச்சாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த பழைய கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தின் உள்பகுதியில் மேற்கூரை காரை பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. நான்கு சுவர் பகுதிகளிலும் வெடிப்பு விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் மழை பெய்யும் போது கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பகுதியில் தண்ணீர் கசிந்து உள்ளே இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் பாலிதீன் பேப்பர் போட்டு மூடப்பட்டுள்ளது.
புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
இருந்தும் இந்த ரேஷன் கடை கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கடையில் தான் அந்த பகுதி கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வரும் இந்த ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.