மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
பொங்கல் பண்டிகையையொட்டி மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவெண்காடு:
பொங்கல் பண்டிகையையொட்டி மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மிக உற்சாகமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையில் முக்கிய அம்சமாக விளங்குவது சர்க்கரை பொங்கல் செய்ய உதவும் மண்பானை என்றால் மிகையாகாது.
பொங்கல் பண்டிகை அன்று மண் பானையில் பொங்கல் வைத்து படையல் செய்வது தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மண் பானைகள் தயாரிக்கும் பணி
தற்போது நவீன உலகத்தில் பித்தளை, சில்வர் உள்ளிட்ட பல்வேறு பாத்திரங்கள் சந்தையில் கிடைத்தாலும், மண்பானையில் செய்யப்படும் உணவுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. ஏனெனில் மண்ணாலான பானைகளை பற்றி பழங்காலத்தில் சித்தர்கள் தங்களுடைய குறிப்புகள் மற்றும் பாடல்கள் மூலம் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள் மனிதர்களை தாக்கும் நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மண் பாத்திரங்களுக்கு உண்டு என தெரிவித்துள்ளனர். மண் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவு ருசியாகவும், கெட்டுப்போகாமலும் இருக்கும்.
தற்போது பொங்கல் பண்டிகைக்காக மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், ஆறுபாதி, நடராஜபிள்ளை சாவடி, பொறையாறு, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் பானை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தொழிலில் தொய்வு
இதுகுறித்து மண்பானை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக பெய்த கனமழையின் காரணமாக மண் பானை தயாரிக்கும் பணியை நாங்கள் தொடங்கவில்லை, தற்போது ஒரு வார காலமாக அந்த பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.
தற்போது மண் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மண்பாண்ட தொழிலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உரிய விலை கிடைக்காததால், மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது.
பரிசு தொகுப்பில்...
தமிழக அரசு மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகைக்காக 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதில் கரும்பு விவசாயிகளுக்காக முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.
அதேபோல் பரிசு தொகுப்பில் வரும் ஆண்டில் இருந்து மண் பானைகளையும் சேர்த்து வழங்க வேண்டும். அப்போது தான் எங்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும், இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.