நமக்கு நாமே திட்டத்தில் ரூ.1 கோடியே 74 லட்சம் அரசு அனுமதி
சிவகங்கை மாவட்டத்திற்கு 2021-2022-ம் ஆண்டிற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 74 லட்சத்து 12 ஆயிரம் நிதி ஒதுக்கீடு அரசால் வழங்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்திற்கு 2021-2022-ம் ஆண்டிற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 74 லட்சத்து 12 ஆயிரம் நிதி ஒதுக்கீடு அரசால் வழங்கப்பட்டு உள்ளது.
நமக்குநாமே திட்டம்
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது :-
தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மேற்கொள்ள இருக்கும் பணிக்கு தேவையான திட்ட மதிப்பீட்டு நிதியில் ஒரு பங்கு செலுத்தும் போது 2 பங்கு அரசு நமக்கு திருப்பித்தருவதன் மூலம் நாம் திட்டமிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். சிவகங்கை மாவட்டத்திற்கு 2021-2022-ம் ஆண்டிற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 74 லட்சத்து 12 ஆயிரம் நிதி ஒதுக்கீடு அரசால் வழங்கப்பட்டு உள்ளது.
முன்னுரிமை
அதன் அடிப்படையில் ஊராட்சி பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகள் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்திட்டம் வருங்கால மாணவ, மாணவிகளுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும். எனவே, தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ் உள்ள நிதியை முழுமையாக பயன்படுத்தி ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கு முன்னாள் மாணவர்களும் உதவலாம்.
உட்கட்டமைப்பு
உங்களால் முடியும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டால் அந்தந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகள் முழுவதும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் பெற்று வருங்கால மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் வழிவகை செய்வதுடன், ஊராட்சிப் பகுதிகளின் வளர்ச்சிக்கும் இத்தகைய திட்டம் மிகப் பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.