பழைய நீடாமங்கலம்- வையகளத்தூர் இடையே வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் மந்தம் போக்குவரத்து நெருக்கடிக்கு விரைந்து தீர்வு காணப்படுமா?
பழைய நீடாமங்கலம்- வையகளத்தூர் இடையே வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீடாமங்கலம்:-
பழைய நீடாமங்கலம்- வையகளத்தூர் இடையே வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
போக்குவரத்து நெருக்கடி
திருவாரூர் மாவட்டத்தின் முக்கியமான நகர பகுதிகளில் ஒன்றான நீடாமங்கலம் தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. இங்கு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையம் உள்ளது. தனியார், அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நீடாமங்கலத்துக்கு அருகே வையகளத்தூர், ஒளிமதி, அன்பிற்குடையான், அரவூர், அரவத்தூர், அரசமங்கலம், கிளியூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்க நீடாமங்கலத்துக்கு வந்து செல்கிறார்கள். கிராமப்புறங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நீடாமங்கலம் வழியாக பூண்டி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.
ரெயில்வே பாலத்தில் ஆபத்தான பயணம்
மேற்கண்ட கிராமங்களில் இருந்து நெடுஞ்சாலை வழியாக நீடாமங்கலம் வந்தால் 2 கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை கூடுதலாக பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனால் நேரத்தை மிச்சப்படுத்த கிராமப்புற மாணவ, மாணவிகள் வையகளத்தூர் ரெயில்வே கேட் பகுதியில் வெண்ணாற்றின் குறுக்கே ரெயில்வே பாலத்தை கடந்து நாள்தோறும் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். பெரியவர்கள் நீடாமங்கலம் கடைகளில் பொருட்கள் வாங்கவும், பணிகளுக்கு செல்லவும் ரெயில்வே பாலத்தை கடந்து தான் நாள்தோறும் நீடாமங்கலம் வந்து செல்கின்றனர்.
இதனால் ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பழைய நீடாமங்கலத்தில் சாலை போக்குவரத்துக்கு பாலம் கட்ட வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தஞ்சை மாவட்ட கலெக்டரிடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பணிகள் மந்தம்
அப்போது தொழில்நுட்ப வசதிகள் போதுமானதாக இல்லை என்பதால் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த கோரிக்கை தொடர்ந்து பல ஆண்டுகள் வலியுறுத்தப்பட்டு வந்ததன் விளைவாக கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பழைய நீடாமங்கலம்- வையகளத்தூர் இடையே வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணி தொடங்கியது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட பிறகு வெண்ணாற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததை தொடர்ந்து பால பணிகளின் வேகம் குறைந்தது. தற்போது பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வரும் நிலையில், நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு விரைந்து தீர்வு காண பால பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.