மூத்தோர்களுக்கான தடகள போட்டி
கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில், மூத்தோர்களுக்கான தடகள போட்டி நேற்று நடந்தது.
கோவை
கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில், மூத்தோர்களுக்கான தடகள போட்டி நேற்று நடந்தது.
தடகள போட்டி
கோவை மாவட்ட மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோசியேசன் சார்பில் மூத்தோர்களுக்கான தடகளப் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 30 வயது முதல் 85 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த தடகளப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர், நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
இதில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான பெண்கள் பிரிவில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மைதிலி நடராஜன் முதலிடத்தையும் பானுமதி 2-ம் இடத்தையும் பிடித்தனர். 65 வயது ஆண்கள் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் நந்தகுமார் முதலிடத்தையும், 5 கிலோமீட்டர் நடை ஓட்டப்போட்டியில் செல்லதுரை முதல் இடத்தையும் பிடித்தனர்.
மாநில அளவில்
65 வயதுக்கு மேற்பட்டோருக்காண பெண்கள் பிரிவில் நீளம் தாண்டுதலில் மைதிலி நடராஜன் முதலிடத்தை பிடித்தார். 80 வயதுக்கு மேற்பட்டோர் காண ஆண்கள் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் முனியப்பன் முதலிடத்தையும், புருஷோத்தமன் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த மாதம் 7, 8, 9-ந் தேதிகளில், மதுரையில் நடக்கும் மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் கலந்து கொள்வார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோவை மாவட்ட அத்லெட்டிக் அசோசியேசன் தலைவர் பாலசுந்தரம் மற்றும் செயலாளர் ராதாமணி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.