1308 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் 3 பேர் கைது

1308 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் 3 பேர் கைது

Update: 2021-12-19 16:28 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே விவசாய தோட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 1,308 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

ரகசிய தகவல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டி நாகூரை (கே.நாகூர்) சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது50). இவர் அந்தப் பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். வழக்கமாக உடுமலைப் பேட்டையில் உள்ள வெடி மருந்து நிறுவனத்திடமிருந்து மருந்துகளை வாங்கி குவாரியில் வெடிவைத்து பாறைகளை உடைத்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று முன்தினம் பாதுகாப்பற்ற முறையில் அலட்சியமாக வெடிமருந்துகளை ஒரு விவசாய தோட்டத்தில் வைத்திருப்பதாக கோமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் இப்ராஹீம், சந்திரசேகர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினார்கள். 

3 பேர் கைது

இந்த சோதனையில் காசிபட்டினத்தை சேர்ந்த விஜய் பாபு (40) என்பவரது பழையூர் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் 1,308 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 200 அடி நீளமுள்ள ஒயர்களும் இருப்பது தெரியவந்தது. 
இவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்பற்ற முறையில் விவசாய தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்ததால் தோட்டத்தின் உரிமையாளர் விஜய் பாபு, குவாரி உரிமையாளர் பொன்னுச்சாமி, குவாரி மேலாளர் கனகராஜ் (50) ஆகியோரை கோமங்கலம் போலீசார் கைது செய்தனர். 

ரூ.17 ஆயிரம் 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், குவாரி நடத்த பொன்னுச்சாமி அனுமதி பெற்றுள்ளார். அதேபோல், உடுமலைப் பேட்டையில் உள்ள வெடிமருந்து நிறுவனமும் அனுமதியுடன் தான் வெடிமருந்துகள் விநியோகம் செய்து உள்ளது.
 ஆனால், வெடிமருந்து பாதுகாப்பான வாகனத்தில் கொண்டு வந்து குவாரியில் வெடி வைத்து விட்டு மீதம் உள்ள வெடிமருந்துகளை பாதுகாப்பாக அதே வாகனத்தில் எடுத்துச் சென்றுவிட வேண்டும். ஆனால், இவர்கள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் வெடிமருந்துகளை வைத்திருந்தனர். அதனால், குவாரி உரிமையாளர், குவாரி மேலாளர் மற்றும் வெடிமருந்துகளை வைக்க அனுமதி தந்த தோட்டத்து உரிமையாளர் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மதிப்பு  ரூ.17 ஆயிரத்து 500 ஆகும் என்றனர்.

மேலும் செய்திகள்