கொடிக்கம்பம் நடுவதற்கு பொதுமக்கள் கடும்எதிர்ப்பு
கொடிக்கம்பம் நடுவதற்கு பொதுமக்கள் கடும்எதிர்ப்பு
தாராபுரம் அருகே பா.ஜனதா கட்சி கொடிக்கம்பம் நடுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பா.ஜனதாவினர் கொடிக்கம்பம் நடாமல் திரும்பி சென்றனர்.
பா.ஜனதா கொடிக்கம்பம்
தாராபுரம் அருகே கரூர் சாலையில் மீனாட்சிபுரம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்த பகுதியில் நேற்று பா.ஜனதா கட்சியினர் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட வந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் மீனாட்சிபுரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு பா.ஜனதாவினர் கொடிக்கம்பம் நடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்களுக்கும், பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ஞானவேல் உள்பட 50-கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது மீனாட்சிபுரம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பா. ஜனதா கட்சியில் ஒருவர் கூட உறுப்பினராக இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் வெளியூர்களில் இருந்து எங்கள் பகுதிக்கு வந்து பா.ஜனதாவினர் கொடிக்கம்பம் நட காரணம் என்ன என கேள்வி எழுப்பினர். ஒற்றுமையாக இருந்து வரும் மக்களின் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பா.ஜனதாவினர் கொடிக்கம்பம் நட இருப்பதாக குற்றம் சாட்டினர்.
நிறுத்தம்
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் பா.ஜனதாவினர் இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் பா.ஜனதாவினர் கொடிக்கம்பம் நடுவதை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இதனால் மீனாட்சிபுரம் கரூர் சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.