கூச்சானூரில் 350 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு

கூச்சானூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.;

Update: 2021-12-19 16:20 GMT
கிருஷ்ணகிரி:
நடுகல் 
பர்கூர் ஒன்றியம் வலசகவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்டது கூச்சானூர். இந்த பகுதியில் நடுகல் இருப்பதாக வந்த தகவலையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த நடுகல் அரிதான புலிக்குத்திப்பட்டான் கல் என்பதும், அதன் அருகில் கல்வெட்டு ஒன்று இருந்ததும் தெரியவந்தது. இந்த ஆய்வின் போது ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், வரலாற்று குழுவை சேர்ந்த ரவி, வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், விஜயகுமார், பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
நடுகல் குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
350 ஆண்டுகள் பழமையானது
இந்த நடுகல், 350 ஆண்டுகள் பழமையானது. விஜய வருசத்து பங்குனி மாதம் இந்த நடுகல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த காலத்தில் இந்த பகுதி பாரூர் பகுதியுடன் இருந்துள்ளதை நடுகல்லுடன் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு தெரிவிக்கிறது. அதேபோல காடாண்டான் பள்ளி என்ற ஊர் தற்போதுள்ள கண்ணன்டஅள்ளி என்பதும் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.
காடாண்டான்பள்ளி ஊரை சேர்ந்த பிள்ளை நாயன் மகன் பெரிய பிள்ளான் என்பவர், சாமனக்கல் என்ற ஊரில் புலியை குத்தி கொன்று தானும் இறந்திருக்கிறார். அவரோடு இருந்த நாயும் இறந்ததன் நினைவாக இந்த நடுகல் செதுக்கப்பட்டுள்ளது. அவருடைய மகன் பொன்னாயன் இந்த நடுகல்லை செய்துள்ளார். இந்த கல்லில் சுமார் 60 குழிகள் உள்ளன. இது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்