ஓசூரில் மயக்க மருந்து அடித்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
ஓசூரில் மயக்க மருந்து அடித்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலப்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மனைவி மஞ்சு (வயது 36). இவர் பத்தலப்பள்ளியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் அவர் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது காலை 11 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் கடையில் கண்ணாடி பொருட்கள் சிலவற்றை வாங்கினர். பின்னர் தங்களிடம் போதிய பணம் இல்லை என்றும், ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுத்து வருவதாகவும் கூறி சென்றனர். சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த அவர்கள், திடீரென்று மஞ்சுவின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே ஒன்றை அடித்தனர். இதில் அவர் நிலைகுலைந்தபோது, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அவர்கள் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்று விட்டனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த மஞ்சு இது குறித்து ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இது தொடர்பாக அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓசூரில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.