திருக்கோவிலூர் அருகே 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் எலும்பு கூடாக கண்டெடுப்பு
திருக்கோவிலூர் அருகே 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
திருக்கோவிலூர்
கரும்புவெட்டும் தொழிலாளி
திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் போலீஸ் சரகம் கரையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் காமராஜ்(வயது 30). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிவுசெய்து காமராஜைதேடி வந்தனர்.
எலும்பு கூடாக...
இந்த நிலையில் கரையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் கரும்பு வயலில் உள்ள வேப்பமரத்தில் சேலை ஒன்று தொக்கிக்கொண்டிருந்தது. அதற்கு கீழே எலும்புக்கூடு கிடந்தது. இதைப்பார்த்து அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே திருப்பாலப்பந்தல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் எலும்புக்கூட்டுடன் கிடந்த லுங்கி மற்றும் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சேலை ஆகியவற்றை வைத்து பார்த்தபோது அவர் காணாமல் போன தொழிலாளி காமராஜ் என்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
பின்னர் அந்த எலும்பு கூட்டை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காமராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன தொழிலாளி எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கரையாம்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.