கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே சட்ட விரோதமாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பபட்டது. இதுதொடர்பாக பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்திற்கு பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலைய எல்லைப்பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு தமிழ்மணி உத்தரவின்பேரில் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் தனிப்படை போலீஸ் குழுவினர் சம்பவ இடமான பொள்ளாச்சி திம்மங்குது, செடிமுத்தூர் ரோடு ஆகிய பகுதிக்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 5 இருசக்கர வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. அந்த வாகனங்களில் சாக்கு மூட்டைகள் கட்டப்பட்டு இருந்தன.
7 பேர் கைது
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனங்களில் 17 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் பொள்ளாச்சி குப்புச்சாமி வீதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 60), அவரது மனைவி பத்மாவதி (50), அதே வீதியைச் சேர்ந்த குமரன் (48), குமரன் நகரைச் சேர்ந்த தானு 16, ராஜா மில் ரோட்டை சேர்ந்த தனசேகரன் (28), கேரளா மாநிலம் சித்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (37) மற்றும் கேரளா நடராஜ் கவுண்டர் காலனியை சேர்ந்த தீபக் (21) ஆகியோர் என்பதும், பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசி கடத்தியதாக 7 பேரையும் கைது செய்தனர்.
700 கிலோ அரிசி பறிமுதல்
மேலும் 700 கிலோ அரிசி மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறியதாவது:- மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்-அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்றார்.