ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக தமிழக கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக தமிழக கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை;
வால்பாறை
ஒமைக்ரான் பரவல் எதிரொலி காரணமாக தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
தடுப்பூசி சான்று
வால்பாறையில் தமிழக- கேரள எல்லை பகுதியான மளுக்கப்பாறை பகுதியில் அமைந்துள்ள சேக்கல்முடி போலீஸ் சோதனை சாவடியில் ஒமைக்ரான் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் சுற்றுலா பயணிகள் உட்பட அனைவருக்கும் 2 தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி வால்பாறை பகுதிக்கு கேரளாவிலிருந்து வரக்கூடிய தனியார் பஸ்களிலும் முழுமையாக சோதனை செய்த பின்னரே பயணிகள் வால்பாறைக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டு வருகின்றனர்.
வாகன சோதனை
வாகனங்களில் வரக்கூடியவர்களில் யாருக்காவது சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என்பதும் கேட்டறியப்படுகிறது. வால்பாறை தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினரும் சேக்கல்முடி போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ளவர்கள் தங்களின் குடியிருப்பு பகுதியில் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து யாராவது வந்தால் அவர்களை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் நகராட்சி நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.