தர்மபுரி மாவட்டத்தில் 200 இடங்களில் கால்நடை சுகாதார சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் கலெக்டர் திவ்யதர்சினி தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 200 இடங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-19 15:53 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 200 இடங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு முகாம்
நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 2021-22-ம் ஆண்டிற்கான 200 இடங்களில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கால்நடை வளர்ப்போர் முகாம்கள் நடைபெறும் கிராமங்களுக்கு கால்நடைகளை நேரில் அழைத்துச்சென்று உரிய பரிசோதனை செய்து பயன்பெற வேண்டும். இந்த முகாம்கள் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் 200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
கன்று ஊர்வலம்
இந்த சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் 3 சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு விருதுகளும், கிடேரி கன்று ஊர்வலம் நடத்தப்பட்டு சிறந்த 3 கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் டாக்டர் வேடியப்பன், உதவி இயக்குனர்கள் சண்முகசுந்தரம், மணிமாறன், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் விஜயகுமார், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் கவுரம்மாள் அரிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சோனியாகாந்தி வெங்கடேசன், துணைத்தலைவர் காசிலிங்கம், கிராம வளர்ச்சிக்குழு தலைவர் பொன்னரசு, ஊராட்சி செயலர் சித்தேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்