விழுப்புரம் நகரில் விதிகளை மீறி ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

விழுப்புரம் நகரில் விதிகளை மீறி ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-12-19 15:51 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் நகரில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக விழுப்புரம் போக்குவரத்து போலீசார் சார்பில் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள், டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. 

இதற்கு விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் முன்னிலை வகித்தார்.

போக்குவரத்து நெருக்கடி

கூட்டத்தில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் பேசுகையில், விழுப்புரம் நகரில் ஷேர் ஆட்டோக்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.

 இதில், புதிய பஸ் நிலையத்தில் புறப்படும் ஷேர் ஆட்டோக்கள் கம்பன் நகர் வரையில் வழக்கமாக இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரெயில் நிலையம் முதல் புதிய பஸ் நிலையம்  வரை மட்டும் இயக்கப்படுகிறது. 

 குறிப்பாக, சிக்னல் முதல் ரெயில் நிலையம் வரையில் உள்ள குறுகிய சாலையில் 50-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களை இயக்குவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுகிறது. வரைமுறை இல்லாமல் பொதுமக்களை ஏற்றி இறக்குவது விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. 

ஓட்டுநர் உரிமம் ரத்து

ஆகையால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் ஷேர் ஆட்டோக்கள் அடுத்தது நேருஜி சாலையில் மேற்கு காவல் நிலையம், பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில் நிலையம் ஆகிய 4 இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். 

இதில், சிக்னல்-ரெயிலடி இடையே வேறு எந்த இடத்திலும் நிறுத்தக்கூடாது. ஷேர் ஆட்டோக்களை ரெயிலடியுடன் திருப்ப கூடாது. 

ரெயிலடி மேம்பாலத்தை கடந்து செல்ல வேண்டும். இந்த விதிமுறைகளை கடைப்படித்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும். இந்த விதிகளை மதிக்காமல், விதிகளை மீறும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும். 

 டிரைவர்கள் தொடர்ந்து விதிகளை மீறினால், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்று அவர் பேசினார்.

கூட்டத்தில் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்