ஊட்டி
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலை விரிசலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
சாலையில் விரிசல்
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சில இடங்கள் குறுகலாக இருந்தன. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது உரசி விபத்து ஏற்படும் அபாயம் காணப்பட்டது. விபத்து ஏற்படுவதை தடுக்கவும், வாகன போக்குவரத்தை சீராக்கவும் 17 இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காட்டேரி அருகே விரிவாக்க பணியின் போது சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் சிறிது தூரத்துக்கு இருந்ததால் மேலும் பழுதடையும் அபாயம் ஏற்பட்டது. இதனால் குன்னூரில் இருந்து கனரக வாகனங்கள், அரசு பஸ்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டது.
சீரமைக்கும் பணி
அத்துடன் சாலை விரிசலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அரசு பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் காட்டேரி வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள், பெரிய சுற்றுலா வாகனங்கள் மட்டும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வன் விரிசல் ஏற்பட்ட சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் உடனடியாக தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
கனரக வாகனங்கள் செல்ல தடை
தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டி மண் அகற்றப்பட்டது. அடிப்பகுதியில் இருந்து தடுப்புச்சுவர் கட்டப்பட உள்ளது. மேலும் விரிசல் ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட இருக்கிறது.
இந்த பணிகள் முடிவடையும் வரை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பணி நடைபெறும் பகுதியில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர்.