வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்

வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்

Update: 2021-12-19 14:58 GMT
கூடலூர்

வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல்  ஊழியர்களை நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று வன அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க நீலகிரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் முதுமலை தெப்பக்காடு வனத்துறை அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவரும் மசினகுடி வனச்சரகருமான மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சிவப்பிரகாசம், நீலகிரி வன அலுவலர் சங்க தலைவர் கணேசன், கோவை வன அலுவலர் சங்க தலைவர் பழனி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

துணைத் தலைவர் முத்தமிழ் வரவேற்றார். மாநில தலைவர் சிவப்பிரகாசம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வன ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றார். 

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- 

புதிய ஊழியர்கள் 

வன காவலர்கள் முதல் வனச்சரகர்களுக்கு ஊதிய மற்றும் பதவி உயர்வு அளிப்பதுடன், வனத்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர் களுக்கும் முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும். இரவு பகலாக பணியாற்றும் வன ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிப்பதுடன், இரவு ரோந்து பணிக்காக சீருடை பணியாளர் கொண்ட தனி குழு அமைக்க வேண்டும். 

வனவிலங்குகள் நடமாட்டம், மாவோயிஸ்டுகள் பிரச்சினை திறம்பட கையாளும் வகையில் கூடுதலாக வன சீருடைப் பணியாளர்கள் நியமித்து தனிப்பயிற்சி அளிக்க வேண்டும். மாவட்டந்தோறும் அனைத்து மகளிர் வனச்சரக அலுவலகங்கள் கட்டமைப்புகளுடன் அமைக்க வேண்டும்.

 ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் வனக்காவலர் காப்பாளர் களுக்கு விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் அளிப்பதுடன், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்