வீ்டு புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
வீ்டு புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
ஊட்டி
குன்னூரில் வீட்டுக்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
வளர்ப்பு நாய் பலி
குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே வனப்பகுதியை விட்டு ஒரு சிறுத்தை வெளியே வந்தது.
பின்னர் அந்த சிறுத்தை பி.எஸ்.என்.எல். முன்பு உள்ள வீட்டு வளாகத்துக்குள் புகுந்தது. அப்போது அந்த வீட்டு வாசலில் கட்டி வைக்கப்பட்டு இருந்த நாய் சிறுத்தையை பார்த்து குரைத்தது.
சிறுத்தை அடித்து கொன்றது
இதனால் அந்த நாய் மீது பாய்ந்த சிறுத்தை, அதன் கழுத்தில் கவ்வி இழுத்து சென்றது. பின்னர் சிறுத்தை அந்த நாயை கவ்வியபடி சுற்றுச்சுவரை தாண்ட முயற்சி செய்தது. அப்போது அந்த நாய் கேட்டில் உள்ள கம்பியில் மாட்டிக்கொண்டது. இனால் நாயை அங்கேயே விட்டுவிட்டு சிறுத்தை அங்கிருந்து சென்றது.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டின் உரிமையாளர் எழுந்து பார்த்தபோது நாய், கேட்டில் பிணமாக தொங்கியதையும், அங்கு ரத்தம் வடிந்து இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு ஆய்வு செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் பீதி
குன்னூரில் குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, சிறுத்தை ஒருமுறை குடியிருப்புக்குள் வந்தால் மீண்டும் மீண்டும் வரும். எனவே வனத்துறை யினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றனர்.